பதிவு செய்த நாள்
07
அக்
2018
12:10
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ புரட்டாசி மூன்றாம் சனிக் கிழமையை முன்னிட்டு‚ நேற்று அதிகாலை 4:30 மணிக்கு‚ மூலவர் விஸ்வரூப தரிசனத்தில் அருள்பாலித்தார். 5:30 மணிக்கு திருவாராதனம் நடந்தது. காலை 8:30 மணிக்கு‚ ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி‚ விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில்‚ பட்டாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க‚ சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு‚ அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள்‚ சன்னதி வீதியுலா நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை‚ சாற்றுமறை‚ இரவு 9:00 மணிக்கு சுவாமி ஆஸ் தானம் எழுந்தருளினார்.
திண்டிவனம்: சிங்கனுார் லட்சுமிநாராண சீனிவாசப்பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, சுவாமி சந்தானகாப்பு அலங்காரம் மற்றும் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கள்ளக்குறிச்சி: புண்டரிகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை சுப்ரபாத சேவை, பசுபூஜை செய்து சீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவர்களை மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பின் சேவை, சாற்றுமுறை, திருவாராதனை நடத்தி, சிறப்பு பூஜைகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்து வழிபட்டனர்.
சங்கராபுரம்: காட்டுவனஞ்சூர் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராமர், சீதை, லஷ்மணர், ஆஞ்சநேய சுவாமிக்கு பால்,தயிர்,பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சங்கராபுரம் ஆற்றுபாதை தெருவில் உள்ள பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கண்டாச்சிபுரம்: ராதா, ருக்மணி சமேத பாண்டுரங்க சுவாமி கோவிலில், காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் வரதராஜபெருமாள் பஜனைக்குழுவினரால் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மதியம் 1:00 மணிக்கு உறியடி நிகழ்ச்சியும், மாலை 7:30 மணிக்கு,ராதா,ருக்மணி,பாண்டுரங்க சுவாமிகள் திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை நடந்தது. வைணவப்பெருமை என்ற தலைப்பில் ராமராஜபாரதியார் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.செஞ்சி: பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தங்க அங்கி மற்றும் துளசி மாலை அலங்காரமும் செய்தனர்.9:00 மணிக்கு ஐந்தாயிரம் லட்டுகளை கொண்டு நெய் வேத்யம் செய்தனர். இதே போல் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.