சபரிமலை பிரச்னையில் போராட்டம் தீவிரம்
பதிவு செய்த நாள்
08
அக் 2018 10:10
சபரிமலை : சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த பிரச்னையில், கேரளாவில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பம்பை அருகே, நிலக்கல்லில், சபரிமலை ஆச்சார பாதுகாப்பு கமிட்டி சார்பில், காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் துவங்கியுள்ளது.
சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில், கேரள அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு எதிராக, கேரளாவில் பெண்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பம்பை, எருமேலி, பந்தளம், நிலக்கல், சங்கனாசேரி, செங்கன்னுார் என, பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் உயர் அதிகாரம் உடைய, தாழமண் தந்திரிகளை, பேச்சு நடத்த கேரள அரசு அழைத்தது. இதையடுத்து, பந்தளம் மன்னர் பிரதிநிதி, நாயர் சேவா சங்க நிர்வாகிகளை, தந்திரி குடும்பத்தினர் சந்தித்தனர். பின், தந்திரி கண்டரரு மோகனரரு கூறுகையில், தீர்ப்பை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், பேச்சுக்கு செல்வதில் அர்த்தமில்லை. நாயர் சேவா சங்கம் கொடுத்துள்ள மறுசீராய்வு மனுவில் முடிவு வந்த பின், இதுபற்றி ஆலோசிக்கப்படும், என்றார்.
இது குறித்து தேவசம்போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: தீர்ப்பை, தந்திரி குடும்பத்தினர் நன்கு படித்ததால், இனி அரசிடம் பேசவேண்டாம் என, முடிவு எடுத்திருக்கலாம். உச்ச நீதிமன்றம், 2007-ல், இதுதொடர்பாக மாநில அரசிடம் கருத்து கேட்டது. மத நம்பிக்கைக்கு உட்பட்டது என்பதால், கமிஷனை நியமித்து முடிவெடுக்கலாம் என, அரசு தெரிவித்தது. ஆனால், அதை எல்லாம் மறைத்து, இந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, பம்பை அருகே, நிலக்கல்லில், சபரிமலை ஆச்சார பாதுகாப்பு கமிட்டி சார்பில், காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம், நேற்று துவங்கியது. நிர்வாகிகள் கூறுகையில், நீதிமன்றத்தில், அரசு தவறான அறிக்கை கொடுத்தது. சபரிமலைக்கு வரும் இளம் வயது பெண்களிடம், ஐதீகத்தை எடுத்து சொல்லி புரிய வைப்போம் என்றனர்.
|