பதிவு செய்த நாள்
08
அக்
2018
11:10
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜனின் 1033 வது சதயவிழாவினை முன்னிட்டு இன்று காலை வெகு சிறப்பாக பந்தகால் முகூர்த்தம் நடந்தது. உலக புகழ் பெற்று விளங்கும் பெரிய கோவிலை, கட்டிய ராஜராஜசோழன் பிறந்ததினத்தை சதய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் 1033வது சதய விழா வரும் 19 மற்றும் 20ம் தேதி ஆகிய இரண்டு நாள் நடைபெறுகிறது.
19ம் தேதி காலை கோவில் வளாகத்தில் மங்கள இசை முழங்க விழா தொடங்கி, திருமுறை அரங்கம், கருத்தரங்கமும், திருமுறை பன்னிசை போன்றவையும், விழாவின் இரண்டாம் நாள் 20ம் தேதி காலை புத்தாடை வழங்குதல், அரசு சார்பிலும், முக்கிய பிரமுகர் சார்பிலும் ராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியும், பெருவுடையார், பெரியநாயகிக்கு 48 வகை பொருள்கள் கொண்டு பேராபிஷேகம் நடைபெறும். இவ்விழாவை முன்னிட்டு, இன்று காலை கோவிலில், மங்கள் இசை முழங்க, பந்தகால் கொடி கம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபதரானையுடன் பந்தகால் நடப்பட்டன. 60 ஆண்டுகளுக்கு பிறகு, ராஜராஜ சோழன் மற்றும் உலோக மாதேவி சிலைகள் மீட்கப்பட்ட நிலையில் நடைபெறும் முதலாவது சதய விழா என்பதால் இதற்கு முன்பு நடைபெற்றதை விழாக்களை விட சிறப்பாக விழா இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.