பதிவு செய்த நாள்
09
அக்
2018
01:10
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில்,மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் அளித்தனர். திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஒவ்வொரு மாதமும், அமாவாசை அன்று, திரளான பக்தர்கள் பெருமாளை வழிபடுகின்றனர்.நேற்று (அக்.,8ல்) , புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்தினமே திருவள்ளூருக்கு வந்து குவிந்தனர்.
கோவில் வளாகத்தில் தங்கிய பக்தர்கள், நேற்று (அக்.,8ல்) காலை, ஹிருதாப நாசினி குளத்தில் நீராடி, முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.பால், வெல்லம் ஆகியவற்றை குளத்தில் கரைத்து, கோவிலுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை தரிசித்தனர்.திருவள்ளூர், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், மகாளய அமாவாசையை முன்னிட்டு, நேற்று (அக்.,8ல்) காலை 5:00 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை, 5:30 மணியளவில், உற்சவர் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது.
* திருத்தணி முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள திருக்குளம் என்ற சரவண பொய்கை, நல்லாங்குளம் ஆகிய இடங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர்.அதிகாலை முதல், மதியம், 2:00 மணி வரை, நகர மற்றும் கிராம வாசிகள் குவிந்தனர். அங்கு, தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, நேர்த்தி கடனை செலுத்தினர்.மாலையில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பெண்கள் சுவாமியை
வழிபட் டனர். பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவில் குளத்தில், அதிகாலை, 5:00 மணி முதல், பகல், 12:00 மணி வரை, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். சிலர், கால்நடைகளுக்கு அகத்தி கீரை வாங்கி கொடுத்தும், இல்லாதவர்களுக்கு உணவு பொட்டலங்களையும் வழங்கினர்.