பதிவு செய்த நாள்
09
அக்
2018
01:10
போடி:மகாளய அமாவாசையை முன்னிட்டு போடி வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ் வரர் கோயில், கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணியர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்கதர்கள் தரிசித்தனர்.
* கம்பம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். ஆனால் அங்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஆற்றில் குளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. மழை காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 4 நாட்களாக அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்தது. பாதுகாப்பு கருதி நேற்றும் அனுமதி வழங்கப் படவில்லை இதனால் ஆற்றில் குளித்துவிட்டு ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தொடர்ந்து பூதநாராயணர் கோயில், வேலப்பர் கோயில், ஆதிஅண்ணாமலையார் கோயில் களில் சிறப்புபூஜையில் பங்கேற்றனர். ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிவனடியார் முருகன் சுவாமிகள் அபிேஷகம், ஆராதனை செய்தார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
* உத்தமபாளையம் :உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் முல்லையாற்று படித் துறையில் ஏராளமானோர்நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் காளாத்தீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தனர். கம்பம் கம்பராயப்பெருமாள், வேலப்பர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* பெரியகுளம்:பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதியின் இரு கரைகளிலும் ஆண், பெண் மருதமரங்கள் உள்ளன. இங்கு குளிப்பதால் தோஷங்கள் நீங்கி, சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீராடினர். பாலசுப்பிரமணியர் கோயிலில் முருகன், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி உட்பட தெய்வங்களை வழிபட்டனர். அர்ச்சகர்கள் கார்த்திக், தினேஷ் ஆகியோர் பூஜை செய்தனர்.
* வராகநதியின் மற்றொரு பகுதியில் ஏராளமானோர் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்தனர்.
* கைலாசபட்டி மலைமேல் கைலாசநாதர் கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.