சென்னை : பூங்கா நகர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், வெள்ளி ரதப்பிரதிஷ்டை கோலாகலமாக நேற்று நடந்தது. யானை மற்றும் குதிரையுடன் வெள்ளித் தேர் மாடவீதிகளில் வலம் வந்தது. காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, இறைபணி மன்றத்தினரால், உபயமாக வழங்கப்பட்ட பல லட்ச மதிப்பிலான வெள்ளி ரதப்பிரதிஷ்டை நேற்று நடந்தது. சிவாச்சாரியார்கள் யாகம் நடத்தினர். பின் கலச நீரை கொண்டு, வெள்ளி ரதத்திற்கு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து, வெள்ளி ரத ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட யானை மற்றும் குதிரை அணிவகுப்புடன் வெள்ளி ரதத்தை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கோவில் மாடவீதிகளில் வெள்ளி ரதம் வலம் வந்தது. மாலையில் நடந்த நிகழ்ச்சியில், உற்சவ காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் வெள்ளித் தேரில் சகல வாத்தியங்களுடன், வாணவேடிக்கையுடன் வலம் வந்தார். நிகழ்ச்சியில் துணை ஆணையர் வான்மதி, நிர்வாக அலுவலர் பாரிவள்ளல், இறைபணி மன்ற தலைவர் சத்தியசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.