பதிவு செய்த நாள்
20
அக்
2018
01:10
ஓசூர்: தளி அடுத்த, கும்ளாபுரத்தில் நடந்த கவுரம்மா கோவில் திருவிழா பல்லக்கு உற்சவத் தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அடுத்த கும்ளாபுரம் கிராமத்தில் கடந்த மாதம், 13ல் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் போது, கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரம்மா கோவிலில், விநாயகர் மற்றும் கவுரம்மா சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கடந்த, 17 இரவு, வீரபத்திர சுவாமி கோவில் அருகே அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் (அக்., 18ல்) காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் செய்யப்பட்டது.
மாலை, 4:00 மணிக்கு விநாயகர், கவுரம்மாவிற்கு தனித்தனியாக பல்லக்கு தயார் செய்து, அதில் சிலைகளை வைத்து, பக்தர்கள் பல்லக்கை சுமந்து ஊர்வலமாக சென்றனர். அப்போது, சிவானந்த சிவாச்சாரியார் மடாதிபதி ஆசிரமத்தில், சுவாமிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக பல்லக்கை சுமந்து சென்ற பக்தர்கள், கும்ளாபுரம் ஏரியில் விநாயகர், கவுரம்மா சிலைகளை கரைத்தனர்.
தளி, தேன்கனிக்கோட்டை, பேலாளம், ஆச்சுபாலம், கோபனப்பள்ளி மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள் பங்கேற்றனர்.