பதிவு செய்த நாள்
09
பிப்
2012
11:02
தூத்துக்குடி:மணக்கரையில் உள்ள அனந்தநம்பிகுறிச்சி அருள்தரும் அழகிய பூபர் சாஸ்தா, பத்திரகாளி அம்மன், வண்ணியர் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று (9ம் தேதி) நடக்கிறது.பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகரால் தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமம் அனந்த நம்பிகுறிச்சியில் சுயம்பு மூர்த்தியாக இயற்கையான கல்பாறையில் எழுந்தருளி செய்யப்பட்ட ஆலயத்தில் பூபர் சாஸ்தா, பத்திரகாளி அம்மன், மாட்டுடையார், வண்ணியராயர் மற்றும் சகல பரிவார தெய்வங்களுக்கும் மூலஸ்தான மண்டபம், விமான கோபுரங்கள் அமைக்கப்பட்டு இன்று காலை மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக முதல் நாள் நிகழ்ச்சியாக 7ம் தேதி மங்கள இசை, திருமுறை பாராயணம், எஜமான அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதற்கால யாக பூஜைகளும் நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால பூஜையும், இரவு மூர்த்திகளுக்கு யந்திர ஸ்தாபனம், ரத்னன்யாசம், பிம்பசுத்தி நிகழ்ச்சியும் நடந்தது. மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு யாக சாலையில் இருந்து கும்பம் எழுந்தருளி மஹா கணபதி, பூபர் சாஸ்தா, பத்திரகாளி அம்மன் மற்றும் சகல பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு வண்ணியர் சன்னதியில் கும்பாபிஷேகமும் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் ராமசாமி தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.