பதிவு செய்த நாள்
23
அக்
2018
01:10
குளித்தலை: குளித்தலை அடுத்த, தண்ணீர்பள்ளி கிராமத்தில் புற்று மாரியம்மன் கோவில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவில், காவிரி ஆற்றுப் படுகைக்கு செல்லும் வழியில் உள்ள செல்வ விநாயகர் கோவில், ஆகிய மூன்று கோவில்களுக்கு நேற்று அக்., 22ல் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (அக்., 21ல்) காலை, கிராம பொது மக்கள் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக் குடம் எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். புற்று கவுமாரியம்மன் கோவில் அருகே உள்ள யாகசாலையில், முதல் கால பூஜை, கணபதி பூஜை, உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. மாலை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று அக்., 22ல் காலை, மூன்றாம் கால யாக பூஜை, 9.00 மணியளவில் செல்வ விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவசக்தி விநாயகர் கோவில், புற்று கவுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தண்ணீர் பள்ளியை சுற்றியுள்ள கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாக்குழு சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.