விலங்குகளும் உண்கின்றன; உலாவுகின்றன; வம்சத்தை வளர்க்கின்றன. நாமும் அதைப்போலவே செய்கிறோம். ஆனால் விலங்கிலிருந்து மனிதன் உயர்ந்து நிற்பது, பக்தி எனும் உயரியச் செய்கையால்தான். ஒரு காட்டில் விலங்குகள் மாநாடு நடந்தது. அதில் பேசிய சிங்கம் “விலங்குத் தோழர்களே, உயிர் வாழ்க்கைக்கு ஆடைகள் அவசியமா? முட்டாள் மனிதர்கள் அவசியமின்றி ஆடைகளுக்காக அதிக பணத்தைச் செலவழிக்கிறார்கள். அது கண்டிக்கத்தக்கது; வருந்தத்தக்கது” என்று முழங்கியதாம்! அதுபோலத்தான் ‘மனித வாழ்க்கைக்குக் கடவுள் வழிபாடு தேவையா ’ என்று கேட்கிறார்கள், சிலர். மானம் உள்ளவன் ஆடை உடுத்துவான்; மனம் உள்ளவன் ஆண்டவனை வணங்குவான். (வாரியார் சுவாமிகள் அருளியது)