பதிவு செய்த நாள்
10
பிப்
2012
11:02
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வெளித் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது.நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் திருநாளன்று "திருநெல்வேலி என பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருநாள் நடந்தது. திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 10ம் திருநாளில் நெல்லை ஜங்ஷன் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரியும், 11ம் திருநாளில் காந்திமதியம்மன் சன்னதி சவுந்திரசபையில் நடராஜர் திருநடனமும் நடந்தது.தைப்பூச திருவிழா 12ம் நாளான நேற்று காலை நெல்லையப்பர், காந்திமதியம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலையில் பஞ்சமூர்த்திகள் தெப்பத்திற்கு எழுந்தருளினர். நாதஸ்வர கலைஞர்கள் வாத்யங்களை இசைக்க, அலங்கரிக்கப்பட்ட மின் ஒளியில் பஞ்சமூர்த்திகள் தெப்பத்தில் 9 முறை வலம் வந்தனர். கடைசியில் கப்பல் வாத்யம் இசைக்கப்பட்டது. ஓதுவார்கள் தேவாரம், திருவாசகத்தை பாடினர்.தெப்ப உற்சவத்தையடுத்து பஞ்சமூர்த்திகள், திருஞான சம்பந்தர் கோயிலுக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீபாராதனையுடன் தைப்பூச திருவிழா நிறைவடைந்தது. தெப்பஉற்சவத்தில் நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் சங்கர், பயிற்சி செயல் அலுவலர் நாராயணன், கவுன்சிலர் சங்கர் மற்றும் நெல்லை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.