பதிவு செய்த நாள்
10
பிப்
2012
11:02
குறிஞ்சிப்பாடி:வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற சித்திவளாகத்தில் திருஅறை தரிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய ஞானசபையில் 141வது தைப்பூச ஜோதி தரிசனம் கடந்த 7ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடைபெற்றது.
நேற்று காலை 10 மணிக்கு தருமச்சாலையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழையை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மீனவர் சமுதாய மக்கள் சுமந்து சென்றனர்.வள்ளலார் நடந்து சென்ற பாதையான பார்வதிபுரம் கிராமம், செங்கால் ஓடை, கருங்குழியில் வள்ளலார் வணங்கிய பெருமாள் கோவில், பிள்ளையார் கோவில், அவர் தண்ணீரில் விளக்கேற்றிய இல்லம், தீஞ்சுவை ஓடை, அதன் அருகில் உள்ள மண்டபம் வழியாக சித்தி வளாகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. பல்லக்கிற்கு வழி நெடுகிலும் கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வள்ளலார் சித்தி பெற்ற அறையின் முன் வைத்து பகல் 12 மணிக்கு திருஅறை திறக்கப்பட்டது. திருஅறையை அயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேட்டுக்குப்பம் சித்தி வளாக மேடையில் துரை சீனிவாசன் தலைமையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. கருங்குழி ஊராட்சித் தலைவர் முத்துகுமரசாமி முன்னிலை வகித்தார். ஊரன் அடிகள், சேது சாமிகள் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினர்.