பதிவு செய்த நாள்
10
பிப்
2012
11:02
திருநெல்வேலி:நெல்லை டவுன் கம்பாநதி காமாட்சி அம்பாள் உடனுறை மூல மகாலிங்க சுவாமி கோயிலில் இன்று (10ம்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலுடன் இணைந்த நெல்லை டவுன் (காட்சி மண்டபம்) கம்பாநதி காமாட்சி அம்பாள் உடனுறை மூல மகாலிங்க சுவாமி கோயில் ரிஷிவனம், தேவதாருவனம், தபோவனம் என போற்றப்படுகிறது.இங்கு உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவனை மணம் புரிய அம்பாள் தவமிருந்து 38 அறங்களை வளர்த்ததாக வரலாறு உள்ளது. இங்கு சிவப்பு நிற கம்பாநதி பாதாள வாகினியாக ஓடுகிறது. அகத்தியர் வேண்டுகோளை ஏற்று கம்பாநதி, விஸ்வேஸ்வர லிங்கம் இங்கு தோன்றி அருளியதாக ஐதீகம் உள்ளது. இறைவனை மணம் செய்ய அம்பாள் தவம் இருந்ததால் திருமணத்தடை நீங்க இங்கு சிறப்பு வழிபாடு நடத்தலாம் என ஆன்மீகப்பெரியவர்கள் கூறுகின்றனர். இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 6ம்தேதி துவங்கியது. யாகசாலை பூஜைகள் நேற்றுமுன்தினம் துவங்கின. நேற்று காலை திருமுறை பாராயணம், இரண்டாம் கால பூஜை, மாலையில் மூன்றாம் கால பூஜை, இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.இன்று காலை திருமுறை பாராயணம், நான்காம் கால பூஜை, பிம்பசுத்தி, ரட்ஷாபந்தனம், நாடிசந்தானம், திரவ்யாகுதி நடக்கிறது. காலை 9.20 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. 10 மணிக்கு அம்பாள், சுவாமி, பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகேஸ்வர பூஜை நடக்கிறது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி, கம்பா நதி காமாட்சி அம்பாள் கைங்கர்ய சபா தலைவர், உறுப்பினர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.