வீரவநல்லூர்:திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி கோயிலில் ராஜகோபுரம் மற்றும் விமான பாலாலயமும், திருப்பணி கால்கோள் விழாவும் நேற்று நடந்தது. கருவூர் சித்தருக்காக செவிசாய்த்த கருணாமூர்த்தி திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி-கோமதிஅம்பாள் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் முயற்சியால் கோயில் திருப்பணிகள் நடந்தது. ஸ்ரீகாஞ்சிகாமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சுவாமிகள், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதுபோல் இப்போதும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் தீவிர முயற்சியால் அரசு நிதி ரூ.18 லட்சம் உட்பட ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நாறும்பூநாதசுவாமி கோயிலில் திருப்பணிகள் நடக்க உள்ளது. இதற்கான ராஜகோபுரம் மற்றும் விமான பாலாலயமும், திருப்பணி கால்கோள் விழாவும் நேற்று நடந்தது.இதனை முன்னிடடு கும்பங்கள் வைக்கப்பட்டு, ஹோமம் வளர்க்கப்பட்டு, யாக பூஜைகள் நடந்தது. தூத்துக்குடி ஆலாலசுந்தரவேத சிவகாம வித்யாலய முதல்வர் செல்வம் பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருப்பணி கால்கோள் விழாவும் நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட நீதிபதி சுப்பிரமணியன், ஸ்தபதி பார்த்திபன், பஞ்.,தலைவர் முத்துஅய்யப்பன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.