ஆழ்வார்குறிச்சி:கடையம் வில்வவனநாத சுவாமி - நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக இன்று (10ம் தேதி) பாலாலயம் நடக்கிறது. கடையத்தில் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு தசரத சக்கரவர்த்தி வந்து தனது சாப விமோசனத்திற்காக வந்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் கடையத்தில் பாரதியார் வாழ்ந்த காலங்களில் தினமும் நித்யகல்யாணி அம்பாளை வழிபட்டு கோயில் முன்புள்ள தட்டப்பாறையில் அமர்ந்து காணி நிலம் வேண்டும் பராசக்தி.. உட்பட பல பாடல்களை எழுதியுள்ளார். இக்கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் வரும் சித்திரை திருவிழாவிற்கு முன்னர் கும்பாபிஷேகம் நடத்துவற்காக கடந்த 29ம் தேதி சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி இன்று காலை விமான திருப்பணிகளை மேற்கொள்ள விமானங்களுக்கு பாலாலயம் நடக்க உள்ளது.பாலாலய விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி முருகன் மேற்பார்வையில் வில்வவனநாத சுவாமி - நித்யகல்யாணி அம்பாள் பக்தர்கள் செய்து வருகின்றனர். பாலாலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டுமென செயல் அலுவலர் முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.