பதிவு செய்த நாள்
31
அக்
2018
12:10
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, நீர்நிலை பகுதியில், கோவில் கட்டுமான பணியை, தாசில்தார் தடுத்து நிறுத்தினார். குமாரபாளையம், குளத்துக்காடு பகுதியில், கோவில் விரிவாக்க கட்டுமானப் பணிகள் நேற்று (அக்., 30ல்) துவங்கின. இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தாசில்தார் ரகுநாதன், கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: குளத்துக்காடு, தனியார் ஆலை முன் உள்ள ஜெய் ஆஞ்சநேயர் கோவில் விரிவாக்க கட்டுமான பணிகள் நேற்று நடந்தன. இது, நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால், பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், இதுவரை கட்டப்பட்ட பகுதிகளை அகற்ற வேண்டும்; இல்லையேல், பொக்லைன் மூலம் அகற்றப்படும் என எச்சரிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.