பதிவு செய்த நாள்
10
பிப்
2012
11:02
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவையொட்டி, நேற்று பால்கம்பம் நடுவிழா நடந்தது. ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலை மீது, 800 ஆண்டு பழமையான சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று, சந்திரசூடேஸ்வரர் கோவில் அடிவாரத்தில் தேர்நிலையில் பால் கம்பம் நடுவிழா நடந்தது. முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மனோகரன் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி தலைவர்(பொ) மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் நாகராஜ், ரோஜா பாண்டியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வரதராஜன் முன்னிலை வகித்தனர். கிராம கவுண்டர்கள், அச்சகர்கள், மேளதாளம் முழங்க தேர்கட்டும் பணிக்கு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதையடுத்து, தேர்த்திருவிழாவுக்காக சந்திரசூடேஸ்வரர் கோவிலில் உள்ள மூன்று தேர்களையும் புதுப்பிக்கும் பணி நேற்று துவங்கியது. தேர்ப்பேட்டை பாலு, ஹிந்து முன்னணி முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேர்த்திருவிழாவுக்கு முன்னதாக நாளை (11ம் தேதி) சந்திரசூடேஸ்வரர், பண்டாஞ்சநேயசுவாமி, ராம்நகர் கோட்டை மாரியம்மன், ராமர் கோவில் ஆகியவற்றின் பல்லக்கு திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பல்லக்குகளில் ஸ்வாமிகளை ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். பல்லக்கு திருவிழாவையொட்டி அன்னதானம், இரவு நாதஸ்வர கச்சேரி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.