பதிவு செய்த நாள்
01
நவ
2018
03:11
பகவான் ஸ்ரீனிவாசன் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கினார். குபேரனும் பகவானிடம், தங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும். “சங்க நிதி, பதுமநிதி இரண்டையும் கொண்டுவந்து குவிக்கட்டுமா பிரபு ” என்று கேட்டார்.
“குபேரா! யுக சம்பிரதாயங்களை மீறி நாம் எதுவும் செய்யக்கூடாது. இந்தக்கால தர்மப்படி நான் கடன் பத்திரம் எழுதித்தருகிறேன்” என்று கூறி பகவான் பிரம்மதேவரைப் பார்த்துக் கடன் பத்திரம் எழுதச் சொன்னார்.
குபேரன், பகவானுக்கு பதினாறு லட்சம் “சுவர்ண ராமமுத்ரிகா ” என்னும் தங்க நாணயங்களை கடனாகத் தருவது என்றும், ஆண்டு ஒன்றுக்கு, நூற்றுக்கு ஒரு ராமுத்ரிகா வீதம் வட்டியை மட்டுமே மாதமாதம் செலுத்தி வந்து கலியுக முடிவில் கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுவது என்றும் நிபந்தனைகளோடு பிரம்மதேவர் கடன் பத்திரம் எழுதினார். அதில் பகவான் கையெழுத்துப்போட்டுக் கொடுத்தார். பிரம்மனும், சிவனும், அஸ்வத்தாமா என்ற பிப்பில மரமும் சாட்சியாகக் கையெழுத்திட்டனர். ஸ்ரீனிவாசன், பத்மாவதி திருமணமும் இனிதே சிறப்பாக நடந்தது.
ஆனந்த நிலையத்தில் லட்சுமி பத்மாவதி சமேதராக வசித்து வரும் காலத்தில் பகவான் ஒரு நாள் லட்சுமிதேவியை நோக்கி, “பிரியே! குபேரனிடம் வாங்கிய கடனுக்கு, வட்டி ஏறிக்கொண்டு போகிறதே, என்ன செய்யலாம்” என்று கேட்டார். அதற்கு தேவியும், பகவானே அதைப்பற்றித்தாங்கள் எதற்காகக் கவலைப்படவேண்டும், கடனை இப்பொழுதே திருப்பிக் கொடுத்து விடலாம் என்றாள்.
இல்லை தேவி! கடனை அவ்வாறு திருப்பிக்கொடுப்பதற்காக நான் வாங்கவில்லை. நான் வாங்கியதை உலக மக்களுக்கு உணர்த்தவும், பக்தியின் பெருமையை உணரச் செய்வதற்காகவும்தான்! கலியுகத்தில் மனிதர்கள் உண்மையான பக்தியை செலுத்துவது என்பது நடக்காத காரியம்! தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக பிரார்த்தனை மூலம் ஆன பக்தியே பாமரர்களிடம் காணப்படும். அவர்களுடைய மிகக்குறைந்த பக்திக்கும் பலன் அளிப்பவனாகவும், என்னை நினைத்த மாத்திரத்தில் அவர்களுடைய கஷ்டங்களை விலக்கக்கூடியவனாகவும், கலியுகம் முடிகிறவரை நான் இத்திருமலைமேல் வசிக்க விரும்புகிறேன்” என்றார் பகவான்.
லட்சுமி தேவியும், ஸ்வாமி! தங்கள் கருணையின் திறனை உணரவல்லவர் யார்? ஆனால் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதன் மூலம், குபேரனுக்கு எவ்வாறு வட்டி கட்ட முடியும்? என்று கேட்டாள்.
“தேவி! கலியுகத்தில் ஜனங்களுக்குப் பொருள் ஒன்றே பிரதானமாகத் தோன்றும்! அதனால் பலவித பாவங்களைச் செய்து பொருள் தேடுவார்கள். அந்தப் பாவங்களின் பயன் கொடிய நோய்களாகவும், துன்பங்களாகவும், இழப்புகளாகவும் வந்து வருத்தத்தொடங்கும் போது, “கோவிந்தா! என்னைக் காப்பாற்று” என்று அலறுவார்கள். துன்ப நிவாரணம் ஏற்பட்டால் இவ்வளவு காணிக்கை செலுத்துகிறேன் என்று வேண்டிக் கொள்வார்கள். நான் அவர்களுடைய பாவங்களை அந்தக் காணிக்கைகளின் மேல் ஆரோகணிக்கச் செய்து என்னிடம் வரவழைத்துக் கொள்வேன் என்றார்” பகவான். அதற்கு தேவி. “பாவக்கரைப்பட்ட பணத்தால் நன்மை உண்டாக்க முடியுமா? சுவாமி” என்று கேட்டாள். “தேவி! அதிலும் ஓர் உள்நோக்கம் இருக்கிறது. பாவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பொருளை அஞ்ஞானத்தில் பொன்னை விரும்பி என்னைத் துதிப்பவர்களுக்குக்கொடுப்பேன். புண்ணியவான்கள் செலுத்தும் காணிக்கைகளில் ஒரு பகுதியைத் தான் எடுத்துக்கொண்டு, இன்னொரு பகுதியைத் தான் எடுத்துக்கொண்டு, இன்னொரு பகுதியை குபேரனுக்கு வட்டி கொடுப்பேன்” என்றார் இதில்“என்ன பங்கு என்ன சுவாமி?” என்று தேவி கேட்டாள். என்னைத் துதிப்பவர்களுக்கு நீ குறையாது செல்வத்தை வழங்க வேண்டும். அவர்கள் நல்லவர்களா? தீயவர்களா? என்பதை பார்க்கக் கூடாது” என்றார்.
“பகவானே! தங்கள் சித்தம்போல் செய்கிறேன். ஆனால், செல்வப்பெருக்கால் ஜனங்கள் மேலும், மேலும் பாவத்தில் ஆழ்ந்து போகாதபடி தாங்கள்தான் ரட்சிக்க வேண்டும்” என்றாள் ஜகன்மாதா! அதற்கும், “ஒருவழி வைத்திருக்கிறேன், இத்திருமலை மேல் தான தர்மங்களைச் செய்கிறவர்களுக்கு ஒன்றுக்குப் பலமடங்கு புண்ணிய பலன்கள் கிட்டும்; இங்கே என்னைப் பூஜித்தவர்களுக்கும், சர்வார்த்த சித்திகளையும் அளிப்பேன். அதனால் பக்தர்களுக்கு நீ அளிக்கும் செல்வத்தால் தீமை உண்டாகிவிடும் என்று அஞ்சவேண்டாம்” என்று பகவான் ஆறுதல் கூறினார். இந்த வரலாறு புராணத்தில் காணப்படுகிறது.
திருப்பதியில் முடிகாணிக்கை என்பது மிகச் சிறந்த பிரார்த்தனையாகும். உண்டியலில் காணிக்கை செலுத்துபவர்கள் ஏராளம், அங்கேயே “மா” விளக்கு ஏத்துபவர்களும் உண்டு!
இங்கு பிரம்மோற்சவம் என்பது மிக விமர்சையாக நடைபெறுகிறது. தினமும் ஸ்ரீனிவாச கல்யாண மகோற்சவம் செய்பவர்கள் ஏராளம். பகவானுக்குச் செலுத்தும் காணிக்கைகள் போல் பக்தர்களுக்கும் ஏராளமான பொருள்களை அவரவர் விருப்பம்போல் பகவான் அள்ளித்தருகிறார்!
இங்கு தினமும் விழாதான்! உற்சவம் தான்! கூட்டம்தான்! என்று ஒருதனிப்பட்ட உலகமாக இயங்குவதைக் காணலாம். அவர் மனம் வைத்தலான்றி நாம் செல்ல இயலாது. ஆனால் மனத்தளவில் அவரைக்காண நினைத்தால் எப்படிச்சென்றோம். திரும்பி வந்தோம் என்று கனவுபோல் நடந்துவிடும்படியும் செய்வார். இவையெல்லாம் அவரவர் அனுபவத்தில் அறியக்கூடிய உண்மைகள் ஆகும்.
இங்கு பிரசாதம் என்பது லட்டுதான் பிரசித்தி. தற்போது சிலகாலமாக, பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், புளியோதரை என்று பக்தர்களுக்குத் விநியோகிக்கப்படுகிறது.
இவருக்கு மிகவும் பிடித்த விரதம் சனிக்கிழமை விரதமாகும்.
புரட்டாசி சனிக்கிழமை
முதலில் வீட்டில் சுத்தமான இடத்தில் கோலம் போட்டு, அலமேலு மங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமான் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் குத்து விளக்கை ஐந்து முகம் ஏற்றி வைக்கவேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து ராகுகால, எமகண்ட நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கு ஏற்றி, ஷோடசோபசாரங்களுடன் பூஜிக்க வேண்டும். நிவேதனம் சர்க்கரை பொங்கல், வடை, எள்சாதம் ஆகும்.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று. மாவிளக்கேற்றி விரதம் பூஜை இவைகள் செய்ய வேண்டும். புரட்டாசி மாதம் முதல் வார சனி, இரண்டாவது சனிவாரம், மூன்றாவது சனிவாரம், ஐந்தாவது சனிவாரம் இவைகளில் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் அனுஷ்டிக்க வேண்டும். திருமலையில் பகவானின் நவராத்திரி உற்சவம் நடக்கும்போது சனிக்கிழமை விரதம் அனுஷ்டிக்க கூடாதென்றும், எனவே மற்ற சனிக்கிழமை ஏதாவது ஒன்றில் நடத்தவேண்டும் என்றும் கூறுவர்.
அவரவர் வீட்டு வழக்கப்படி அரிசிமாவு, வெல்லச் சர்க்கரை இவைகளைக் கலந்து, மாவில் ஒரு பகுதியை, உடைத்த தேங்காய் நீரை (இளநீர்) விட்டுப் பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை மலைபோல் குவித்து அதன்மேல் தீபம் போல் செய்ததை வைத்து, பஞ்சினால், பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து, சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன்பின் கிரமப்படி பூஜைகள் செய்ய வேண்டும், ஆரத்தி எடுக்கவேண்டும். தீபம் மலையேறியபின் உடைத்த தேங்காய் மூடியைத்துருவியும், ஏலக்காய்பொடி செய்து போட்டும். அந்த மாவை நன்றாக கலந்து வீட்டில் உள்ளோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பிரசாதமாக விநியோகிக்க வேண்டும். அன்று முடிந்தவரை அந்தணர்களுக்கு விருந்தோம்பல் செய்விப்பது விசேஷமாகும்.