பதிவு செய்த நாள்
11
பிப்
2012
11:02
ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை மற்றும் காணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 401 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி நகரில் சாய்பாபா கோவில் உள்ளது. நாடு முழுவதிலுமிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் இக்கோவிலுக்கு வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு, பக்தர்கள் அளித்த நன்கொடை மற்றும் காணிக்கை மூலம், 36 கிலோ தங்கமும், ரொக்கப் பணமாக 401 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. இத்தகவலை, ஷீரடி சாய்பாபா டிரஸ்ட்டின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2011ல் கிடைத்த காணிக்கையுடன் ஒப்பிடும்போது, இது 20 சதவீதம் அதிகம். 2010ம் ஆண்டில் கிடைத்ததை விட 15 சதவீதம் கூடுதலாகும். 2010ல் கோவிலுக்கு காணிக்கைகள் மூலம் கிடைத்த தங்கம் 31 கிலோ. வெள்ளி 320 கிலோ. கடந்த ஆண்டில் கிடைத்த வெள்ளியின் அளவு 440 கிலோ. கடந்த ஆண்டில், 401 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதன் மூலம், நாட்டிலேயே இரண்டாவது பெரிய பணக்கார கோவிலாக, ஷீரடி சாய்பாபா கோவில் உருவாகியுள்ளது. இந்த வருமானம் அதற்கு, முந்தைய ஆண்டில் கிடைத்த வருமானமான 322 கோடி ரூபாயை விட, 20 சதவீதம் அதிகம். வெளிநாட்டு கரன்சி மூலம் கிடைத்த காணிக்கைகள், 2010ல் 5 கோடியே 43 லட்சமாக இருந்தது. 2011ல் ஆறு கோடியே 28 லட்சமாக உயர்ந்துள்ளது.