பதிவு செய்த நாள்
02
நவ
2018
05:11
மத்தியப் பிரதேசத்தில் குபேர பூஜை, ராஜஸ்தானில் வேடுவர் வீர விளையாட்டு, சவுராஷ்டிரத்தில் லட்சுமி பூஜை, மகாராஷ்டிரத்தில் தாம்பூலம் போடும் திருநாள், வங்காளத்தில் காளி பூஜை என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
உத்தரபிரதேசம், பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் ராமபிரான் வனவாசம் முடித்து, சீதையை ராவணனிடம் இருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாளே தீபாவளி என்ற கதை கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் தீபாவளி முதல் குறிப்பு காணப்படுவது, சாளுக்ய திரிபுவன மன்னன் காலத்தில் எழுதப்பட்ட கன்னட கல்வெட்டில்தான். கி.பி. 1117ல் எழுதப்பட்ட இதில், ஆண்டுதோறும் சாஸ்திரங்களில் தேர்ச்சிபெற்ற அறிஞர்களுக்கு தீபாவளிநாளில் பரிசுகள் வழங்கப்பட்டதாக குறிப்பு உள்ளது.
குடந்தை சக்கரபாணி ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், தீபாவளி நாளில் பெருமாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெற்ற விவரங்கள் காணப்படுகிறது.
ஹர்ஷர் தமது நாகானந்தம் எனும் நூலில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றியும் அன்றையதினம் புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். ஷாஜஹான், தீபாவளித் திருநாளில் சமபந்தி போஜனம் அளித்து, வாணவேடிக்கைகள் நிகழ்த்திக் கொண்டாடியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
தீபாவளி நாளன்று இமாசலத்தில் பசுக்களையும்; ஆந்திராவில் எருமைகளையும் நீராட்டி அலங்கரித்துக் கொண்டாடுகின்றனர். நேபாள நாட்டில் தீபாவளியை ஒட்டிக் கொண்டாடப்படும் விழாவின்போது, நாய்களுக்கு மாலை அணிவித்து திலகமிட்டு வழிபடுகின்றனர். வடமாநிலத்தின் சில பகுதிகளில் தீபாவளி சமயத்தில் பசுவின் சாணத்தினால் குடை போன்ற உருவங்கள் செய்து அவற்றுக்குப் பூப்போட்டு தீபமேற்றி வைத்து வழிபடுகின்றனர்.
எமதர்மராஜன், நசிகேதனுக்கு உயிர்ப் பிச்சை அளித்ததும் சாவித்திரிக்கு புத்திர வரம் தந்து சத்தியவானை உயிர்ப்பித்ததும் தீபாவளி நாளில் நிகழ்ந்ததாகக் கொண்டாடுகின்றனர் பஞ்சாப் மக்கள்.
பவிஷ்யோத்ர புராணம் தீபாவளி என்றும்; காமசூத்ரா கூராத்ரி எனவும்; கால விவேகம், ராஜமார்த்தாண்டவம் ஆகிய நூல்கள் சுபராத்ரி என்றும் சுக்ராத்ரி எனவும் தீபாவளியைக் குறிப்பிடுகின்றன. குலு பள்ளத்தாக்கில், தீபாவளி நாளன்று ராவணனுடைய உருவினை எரித்து, ராமபிரானின் வெற்றியைக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
தீபாவளியன்று முக்தியடைந்த மகாவீரர்: கி.மு 540ல் சித்தார்த்தாவுக்கும், திரிசலை தேவியாருக்கும், வைசாலி அருகில் உள்ள குண்டக்கிராமத்தில் வர்த்தமான மகாவீரர் அவதரித்தார். அரசகுடும்பத்தில் பிறந்த வர்த்தமானர் யசோதை என்ற பெண்ணை மறந்தார். இவர்களுக்கு பிரியதர்சினி என்னும் மகள் பிறந்தாள். பெற்றோர் மறைவுக்குப்பிறகு வர்த்தமானர், தன் 30வது வயதில் துறவு மேற்கொண்டார். 12 ஆண்டுகள் ஆன்மிக தாகத்துடன் பல இடங்களுக்குச் சென்று பல மகான்களைச் சந்தித்தார். 43வது வயதில் நிர்வாணம் என்னும் ஞானநிலையை அடைந்தார். தான் பெற்ற ஞான அனுபவத்தை மக்களுக்கு போதனையாக எடுத்துரைத்தார். இவரைப் பின்பற்றிய மக்கள் ஜைனர்கள் எனப்பட்டனர். இவருடைய போதனையில் கொல்லாமை முதலிடம் பெற்றது. எல்லா உயிர்களையும் தன் உயிர்போல நேசிக்க வேண்டும் என்பதே இவருடைய கொள்கை. தன்னுடைய 72வது வயதில் பாவா என்னுமிடத்தில் மகாசமாதி அடைந்தார். தீபாவளியன்று இவர் முக்தி யடைந்ததாக தகவல் உண்டு. அன்பு, அகிம்சை, அறம், கொல்லாமை, எளிமை, தூய்மை, பற்றை விடுத்தல், உண்மை, நேர்மை, உயர்சிந்தனை போன்ற நற்பண்புகளின்
இருப்பிடமாக இவர் திகழ்ந்தார்.
குபேரனை வணங்கும் புத்தமதத்தினர்: தீபாவளிக்கு நாம் குபேர பூஜை செய்கிறோம். சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் குபேரனை வணங்குகின்றனர். இந்நாடுகளில் இவர் சிரிக்கும் சிருஷ்டியாக (ஆனந்தம் தருபவர்) போற்றப்படுகிறார். குள்ளமான, கள்ளமில்லாத, சிரித்த முகமாக கனத்த தொப்பையும், கையில் கலசமும், பொன் மூட்டை, ஆபரணங்கள் என ஸ்வர்ண (தங்க) நிறமாக ஆராதிக்கின்றனர். மதங்கள் மாறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். புத்தமதத்தில் குபேர வழிபாடு இருப்பதால், சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர்.
சர்வமத பண்டிகை: தீபாவளியை இந்து மதத்தினர் மட்டுமல்ல, பவுத்த, ஜைன மதத்தினரும் கொண்டாடுகின்றனர். ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகை. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவை. வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.