1. தீபாவளி நாளில்தான் திருப்பாற்கடலில் மகாலட்சுமி அவதரிததாள். அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் வீடுகளில் நெய் கொண்டு தீபங்கள் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் அவளது அருள் எளிதல் கிடைத்து செல்வச் செழிப்பு மேலோங்கும் என்கிறார்கள்.
2. வட மாநிலங்களில் சில பகுதிகளில் தீபாவளி அன்று ரங்கோலி எனப்படும் வண்ணக் கோலமிட்டு தங்கள் வீட்டு முற்றத்தை அலங்கரிக்கிறார்கள். மஞ்சள், சிவப்பு, காவி ஆகிய மூன்று நிறங்களை கொண்டதாக இந்த கோலம் அமைகிறது. இப்படி கோலம் இடுவதால் மகாலட்சுமி தங்கள் வீட்டில் குடியேறி வாசம் செய்வாள் என்று நம்புகிறார்கள்.
3. தீபாவளிக்கு மறுநாள் குஜராத் மக்கள் நிறைய உளுந்து வடைகளை செய்கிறார்கள். அவற்றை வயிறு முட்ட சாப்பிடுவார்கள் என்று பார்த்தால் அதுதான் நடப்பதில்லை. அந்த வடைகளை அந்திசாயும் மாலை வேளையில் நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுகிறார்கள். இப்படி செய்வதால், குடும்பத்தில் நிலவும் சண்டை சச்சரவுகள், பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகும் என்று நம்புகிறார்கள் அவர்கள்.
4. தீபாவளி அன்று மாலையில் வீட்டின் பின்புறம் தீபம் ஏற்றுவது வழக்கம். இப்படி செய்வதால் எமதர்மனுக்கு திருப்தி ஏற்பட்டு விடும். அதனால் அந்த வீட்டில் யாருக்கும் அகால மரணம் ஏற்படாது. மேலும் யாருக்கும் நரக பயம் இல்லை என்கிறது பவிஷ்யோத்ர புராணம்.
யம தீபம் எதற்கு?: தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக மஹாளய பட்சம் காலத்தில், நம் முன்னோரை நினைத்து வழிபாடுகள் செய்வோம். அப்போது பூமிக்கு வரும் நம் மூதாதையர் நமது வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு மனத்திருப்தியுடன் மேலுலகத்துக்கு திரும்பிச் செல்வது, தீபாவளி - அமாவாசையன்று தான். அப்போது அவர்களுக்கு இருட்டில் பாதை தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, தீபாவளிக்கு முதல் நாள் இரவு யம தீபம் என்ற ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். பெரிய அகல் விளக்கில் ஒரு தீபம் ஏற்றி, வீட்டு மொட்டைமாடி, மேற்கூரைகள்.. என உயரமான இடத்தில் தெற்குநோக்கி வைக்க வேண்டும். அப்போது,
ஸ்ரீ யமாய நம: ஸ்ரீ யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச சித்ர குப்தாய வை நம ஓம் நம: என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. இதனால் யமபயம் நீங்கும்.