பதிவு செய்த நாள்
03
நவ
2018
11:11
சேலம் அருகே, பழந்தின்னி வவ்வால்கள் கூட்டமாக வாழ்கின்றன. இவற்றை காப்பாற்ற, கிராம மக்கள், பட்டாசுகளை வெடிக்காமல், தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். பாலுாட்டிகளின் பெரும்பாலான இனங்கள், அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில், 1 லட்சம் பாலுாட்டிகள் இருந்தன. தற்போது, 4,000 மட்டுமே உள்ளதாக, ஆய்வுகள் கூறுகின்றன. பறக்கக்கூடிய தன்மையை பெற்ற, ஒரே பாலுாட்டி இனம் வவ்வால். இரவில் விழித்து, பகலில் பதுங்கி வாழும் வவ்வால் இனம், கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துவருவதாக, பறவை ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். உலகில், 1,200 வகை வவ்வால்கள் உள்ளன. இவற்றில் பழந்தின்னி, பூச்சித்தின்னி என, இருவகைகள் உள்ளன. இவற்றை எளிதில் வித்தியாசம் காண முடியும்.
பழந்தின்னி: பெரிய கண்கள், குழல் போன்ற மூக்கு, சிறு காது இருக்கும். பறக்கும் நரிபோல் தோற்றமளிக்கும் வவ்வால்கள், இந்தியாவில் மட்டுமே உள்ளன. இவை, 2 கிலோ எடை வரை இருக்கும். தேன், பூ இதழ்கள், மகரந்த துாள், அழுகிய பழங்களை சாப்பிடும். பூச்சித்தின்னி: மிளகு போன்ற சிறு கண், தட்டை மூக்குடன் காணப்படும். மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் வண்டு, பூரான், தேள், பல்லி, எலி போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். வவ்வால்கள், பழங்களை உண்பதால், அயல் மகரந்த சேர்க்கை நடைபெற பெரிதும் துணை செய்கின்றன. இன்றைய சூழலில், காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும், பாறைகள் வெட்டப்பட்டு, குவாரிகளாக மாறி வருவதாலும், பருவநிலை மாற்றத்தால், காட்டுத்தீ ஏற்படுவதாலும், மிக வேகமாக வவ்வால்கள் அழிந்து வருகின்றன. இவற்றைக்காக்க, அனைவரும் முன்வர வேண்டும். அதற்கேற்ப, சேலம் மாவட்டம், ஆத்துாரை அடுத்து, ஊனத்துார் கிராமம் உள்ளது.
அங்குள்ள மணியம்மன் கோவில் வளாகத்தில், மூங்கில், ஆலமரம், மருத மரங்கள் உள்ளன. அதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பகுதியில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால்கள், மணியம்மன் கோவில் மற்றும் சுப்ரமணியர் கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இரவில், கல்வராயன்மலை பகுதிக்கு, இரை தேட சென்றுவிட்டு, காலையில் வந்து தங்கும் வவ்வால்களை, கிராம மக்கள் யாரும் துன்புறுத்துவது இல்லை. தொடக்கத்தில், வவ்வால்களை வேட்டையாட வந்த கும்பலை கூட, அவர்கள் விரட்டி அடித்தனர். கோவிலில் விழா நடத்தும்போது கூட, அதிக சத்தம் வரும் அதிர்வேட்டுகளை தவிர்க்கின்றனர். பல ஆண்டுகளாக தீபாவளியன்று, பட்டாசு வெடிக்காமல் கொண்டாடு கின்றனர். அதேபோல், ஆத்துார் அருகே, மல்லியக்கரை ஊராட்சியில் கருத்தராஜாபாளையம், கருப்பணார் கோவில்; கல்வராயன்மலையில் கருமந்துறை உள்ளிட்ட கிராம பகுதிகளில், மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. - நமது சிறப்பு நிருபர் -