பதிவு செய்த நாள்
03
நவ
2018
11:11
சிக்கல்: ராமநாதபுரம் மாவட்டத்தில், 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில், தொல்லியல் துறையின் அலட்சியத்தால், சிதிலமடைந்து, அழிவின் விளிம்பில் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில், சிக்கல் அருகே உள்ளது, மேலக்கிடாரம் கிராமம். இங்குள்ள, திருநாகேஸ்வரர் கோவில் கி.பி., 1236ல், மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டினால் கட்டப்பட்டது. இங்கு, ஐந்து ஏக்கரில் கோவில் குளம் அழகுற அமைந்துள்ளது. 60 அடி நீளத்தில், கோவில் பிரகாரம், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், முகப்பு மண்டபம் அமைந்துள்ளது.
கருவறையின் மேல்தளம் சிறிய அளவிலான செங்கற்களால் பிரமிடு வடிவில் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் மேல், கலசம் இல்லாமல், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. வெளிப்புற சுவர்களில், வட்ட வடிவ, சித்திர தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டுக்கள் உள்ளன. அதில், இவ்வூரின் பெயர், மூலவரின் பெயர், தானத்தின் தன்மை, தானப்பொருள், பிற ஊர்களின் பெயர்கள் தெளிவாக உள்ளது.
தொல்லியல் ஆர்வலர், எம்.எஸ்.கே.பாக்கியநாதன் கூறியதாவது: தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்ட இக்கோவில் அருகே, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய, கருப்பு, சிவப்பு, வண்ண பானை ஓட்டுச்சில்லுகள் கண்டறியப்பட்டு, அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை படியெடுத்து வைத்துள்ளோம். பிரிட்டிஷ் அரசால், 1905ல் வெளியிடப்பட்ட, பழமையான கோவில்கள் குறித்த வரலாற்று ஆவணத்தில், இக்கோவிலும் இடம்பெற்றுள்ளது. சிவராத்திரியன்று, காலை, 7:00 முதல், 9:00 மணி வரை, மூலவர் சிவலிங்கத்தின் மீது, சூரிய ஒளி நேரடியாக விழும்.
அழிவின் விளிம்பில்: மழை பெய்தால், கோவில் கோபுர கலசங்களின் வழியாக, மழைநீர், மூலவர் சிவலிங்கத்தின் மீது கொட்டுகிறது. 2016 செப்.,ல் ‘தினமலர்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், கோவில் வந்தது. ஆனால், இதுவரை எந்த பராமரிப்பு பணிகளும் செய்யாததால், 800 ஆண்டு பழமைவாய்ந்து இக்கோவில் சிதிலமடைந்து அழிவின் விளிம்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.