பதிவு செய்த நாள்
11
பிப்
2012
11:02
வள்ளியூர் : வள்ளியூர் முருகன் கோயில் அரச மரத்தில் விநாயகர் போன்ற உருவத்தை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கூட்டம், கூட்டமாக வந்து வழிபட்டு செல்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் பெரிய குகை கோயில்களில் வள்ளியூர் முருகன் கோயிலும் ஒன்றாகும். குகை அமைந்துள்ள குன்றின் பெயர் பூரணகிரியாகும். மாயம் நிறைந்த கிரவஞ்சாசூரனின் தலைப்பாகமாக இது கருதப்படுகிறது. திருச்செந்தூர் முருகனின் உருவத்தைப்போல் இங்குள்ள முருகனின் வலதுமுன் கையில் பூவை வைத்து வலதுபின் கையில் சக்தி என்ற ஆயுதம் தாங்கி, இடது முன்கையை தொடையில் வைத்து, இடது பின்கையில் வஜ்ரம் என்ற ஆயுதம் தாங்கி காட்சி தருவது தனிச்சிறப்பாகும். வள்ளிக்கு மட்டும் தனியே கோயில் இருப்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும். முருகன் அகத்தியருக்கு நான்கு வேதங்களை உபதேசித்ததால் இங்குள்ள முருகன் கிழக்கு முகமாகவும், சிவன் மேற்கு முகமாகவும் காட்சி தருகின்றனர். அகத்தியர் இதனை உணர்த்தவே இங்கு சிவனை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்துள்ளார். நாரதர், தேவேந்திரன், அகத்தியர், அருணகிரிநாதர், சிதம்பர முனிவர், பண்ணசரவம் தண்டபாணி சுவாமிகள், ஞானியர் அடிகள், வேலாண்டி பரதேசி மற்றும் வேலாண்டி தம்பிரான் ஆகியோர் அருள்பெற்ற திருத்தலம் வள்ளியூர் முருகன் கோயிலாகும்.
வள்ளியூர் முருகன் கோயிலில் தெற்குபுறம் நாகராஜா மற்றும் நாக கன்னிகள் பீடம் அருகே சிறப்பு வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. இந்த அரசமரத்தின் அடிப்பாகத்தில் சற்றே மேல்புறம் விநாயகர் பெருமான் தும்பிக்கையுடன் காட்சி கொடுப்பது போன்று அதிசய காட்சி அமைந்துள்ளது. இதனை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதிசயமாகவே கண்டுகழித்து பக்தி பரசவத்துடன் அரச மரத்தை வலம் வந்து வழிபட்டு செல்கின்றனர். அரச மரத்தின் அமைப்பில் அதிசய உருவமாக தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் பெருமான் தெரிவதை அறிந்து கேள்விபட்ட பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பார்த்து செல்கின்றனர். அரச மரத்தில் தோன்றிய அதிசய விநாயகருக்கு பக்தர்கள் அபிஷேகம், அலங்காரம் செய்து மாலை, அங்கவஸ்திரம் அணிவித்தும் வழிபட்டு செல்கின்றனர். இதனை காண பக்தர்கள் கூட்டம் தினமும் அலைமோதுகிறது.