தென்காசி : சிவராமபேட்டையிலிருந்து பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு பால்குடம் ஊர்வலம் சென்றது. தென்காசி அருகே சிவராமபேட்டையிலிருந்து ஆண்டு தோறும் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக செல்வது வழக்கம். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், இக்கிராமத்தினை பூர்வீகமாக கொண்டு தற்போது வெளியூர்களில் வசிக்கும் பொதுமக்கள் திருமணத்திற்கு முன்னர் பண்பொழி திருமலைக்குமாரசுவாமிக்கு பால்குடம் எடுப்பது வழக்கம். இந்த ஆண்டு திரளான பக்தர்கள் சிவராமபேட்டை கோயிலில் தங்கியிருந்து விரதம் இருந்தனர். இவர்கள் நேற்று பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பால்குடம் எடுத்த பல பக்தர்கள் தங்களது உடலில் வேல் குத்தியும் சென்றனர். பால்குடம் ஊர்வலம் சிவராமபேட்டை முக்கிய வீதிகள், கொடிக்குறிச்சி, இலத்தூர், சீவநல்லூர், கணக்கப்பிள்ளை வலசை, பண்பொழி வழியாக திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு சென்றது. திரளான பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மதியம் திருமலை முருகனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை இலத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.