பதிவு செய்த நாள்
05
நவ
2018
12:11
புதுடில்லி : அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, மத்திய அரசு, சட்டம் இயற்ற வேண்டும் அல்லது அவசர சட்டம் அமல்படுத்த வேண்டும் என, அகில பாரதிய சந்த் சமிதி என்ற, ஹிந்து அமைப்பு கூறியுள்ளது.
டில்லியில் நேற்று (நவம்., 4ல்), அகில பாரதிய சந்த் சமிதி அமைப்பின் இரண்டு நாள் மாநாடு நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 3,000 சாமியார்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசியோர், பசு பாதுகாப்பு, கங்கை நதி தூய்மையாக்கல், ராமர் கோவில்
கட்டுதல் ஆகியவற்றை நிறைவேற்ற, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என, வலியுறுத்தினர்.
இந்த அமைப்பின் ஆதரவாளர், ராமானந்த் ஹன்ஸ்தேவாசார்யா பேசுகையில், உ.பி., மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, சட்டம் இயற்ற வேண்டும் அல்லது அவசர சட்டம் அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம், என்றார்.
அயோத்தியில், சரயு நதி அருகே, பிரமாண்டமான ராமர் சிலை அமைக்கப்படவுள்ளதாக, உ.பி., அரசு தெரிவித்துள்ளது. இந்த சிலை, சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட, மிக உயர மானதாக இருக்க வேண்டும். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். -அசம் கான் உ.பி., - எம்.எல்.ஏ., சமாஜ்வாதி
விளக்கேற்ற வேண்டும் ராமர் கோவில் கட்டுவதை நனவாக்குவதற்கான காலம் வந்து விட்டது. ஒவ்வொருவரும், ராமர் பெயரில், தங்கள் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். தீபாவளி நாள் முதல், ராமர் கோவில் கட்டும் திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும், என, உத்தரபிரதேச மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதனால், ஹிந்து அமைப்புகள் மத்தியில், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக புதிய உற்சாகம் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.