பதிவு செய்த நாள்
09
நவ
2018
03:11
திருவண்ணாமலை: பரணி, மகா தீபத்திருவிழாவின் போது, அருணாசலேஸ்வரர் கோவிலுக் குள், மொபைல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, என, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி கூறினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும், 14ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 23 காலை, 4:00 மணிக்கு, பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். பக்தர்கள் பாதுகாப்பு வசதி குறித்து, திருவண்ணா மலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி ஆகியோர், நேற்று 8 ல், அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தனர். அதன்பின், எஸ்.பி., கூறியதாவது: பரணி தீபம், மகா தீபத்தின் போது, கோவிலுக்குள் மொபைல்போன் கொண்டு செல்ல, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் சார்பில் வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், பார்கோடு வசதி செய்யப்பட்டு, ஸ்கேன் செய்த பின்பே, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 2,000 பேர் மலை மீது ஏறி, தீப தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். விழாவின்போது, 8,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.