பதிவு செய்த நாள்
09
நவ
2018
03:11
ஸ்ரீபெரும்புதூர்: வயது முதிர்வால் அவதியுற்ற ஸ்ரீபெரும்புதூர் கோவில் ஒட்டகம் நாச்சியார், கால்நடை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், கோதை என்ற பெண் யானை உள்ளது. இதேபோல், 22 வயதான நாச்சியார் என்ற பெண் ஒட்டகமும் தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாடின் போது, யானையும், ஒட்டகமும் சுவாமி முன் செல்வது வழக்கம். நாச்சியார் ஒட்டகம், 1997ம் ஆண்டு முதல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. நாச்சியார், வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்தது.மேலும், காகம் உள்ளிட்ட பறவைகள் நாச்சியார் ஒட்டக த்தை அடிக்கடி கொத்தி காயப்படுத்தி வந்தன. இதனால், ஒட்டகத்தை கோவில் வளாகத்தில் பராமரிக்க முடியாத நிலை இருந்து வந்தது.இதையடுத்து, நாச்சியார் ஒட்டகம், சென்னை, பெசன்ட் நகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில், 27ம் தேதி ஒப்படைக்கப் பட்டது. இனி, அங்கேயே தங்க வைக்கப்பட்டு, ஒட்டகம் பராமரிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.கடந்த, 21 ஆண்டுகளாக, ஸ்ரீபெரும்புதூர் கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கும், குழந்தை களுக்கும் காட்சியளித்த நாச்சியார் ஒட்டகம், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து, பிரியாவிடை பெற்று சென்றது. இனி, நாச்சியார் ஒட்டகத்தை, மீண்டும், பார்க்க முடியாது என்பதால், பக்தர்கள் சோகம்அடைந்துள்ளனர்.