பதிவு செய்த நாள்
10
நவ
2018
11:11
திருவனந்தபுரம் : சபரிமலையில் இந்தாண்டு நடக்கும், மண்டல மற்றும்மகரவிளக்கு பூஜையை காண, 550 இளம் பெண்கள், போலீஸ் இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில், பத்தனம் திட்டாவில் உள்ள சபரிமலை அய்யப்பன்கோவிலில், ஆண்டுதோறும், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள், மிக சிறப்பாக நடக்கும், இதை தரிசிக்க,நாடு முழுவதும், பல லட்சம் பக்தர்கள், சபரிமலைக்கு வருவர். கோவிலில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும், பக்தர்கள் எளிதாக அய்யப்பனை தரிசிக்கவும், கேரள போலீசார், சில ஆண்டுக்கு முன்,பக்தர்கள் முன் பதிவு செய்வதற்காக, இணையதளம் ஒன்றை துவக்கினர். இதில், முன்பதிவு செய்யும்போது, பக்தர்கள் தங்களின் புகைப்படம், முகவரி அடையாளச் சான்று, தனிப்பட்ட விவரங்கள், செல்போன் எண் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.
முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு, சாமி தரிசனம் செய்யும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு, அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. சபரிமலையில், 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய, பல ஆண்டுகளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், சபரிமலையில், அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என, செப்., 28ல் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, கேரள மாநிலம் முழுவதும், ஒரு மாதமாக, தொடர் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்நிலையில், சபரிமலையில், மண்டல பூஜை, 16ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, அய்யப்பனை தரிசிக்க, இதுவரை, 3.5 லட்சம் பக்தர்கள், போலீஸ் இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனர். இதில், 10 - 50 வயது உள்ள, 550 பெண்களும் முன்பதிவு செய்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் என, கேரள அரசு ஏற்கனவே தெரிவித்து உள்ளது. இதற்கு, பா.ஜ., - காங்., மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பினராயி பிடிவாதம்: சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது, 13ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது. இதில், தீர்ப்புக்கு ஆதரவாக செயல்பட திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு எடுத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் பிடிவாதமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும், தற்போதைய நிலை பற்றியும் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.