பதிவு செய்த நாள்
14
நவ
2018
02:11
சென்னிமலை: சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட, முருகன் கோவில்களில், நேற்று (நவம்.,13ல்), சூரசம்ஹாரம் நடந்தது.
சென்னிமலை மலை மீதுள்ள, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி விழா, கடந்த 8ம் தேதி தொடங்கியது. நேற்று (நவம்., 13ல்) மதியம், மலைக்கோவிலில் சூரனை வதம் செய்ய, சக்தி வேல் வாங்கும் வைபவம் நடந்தது.
இரவு முருகப்பெருமான் சமேதராக, மலை அடிவாரத்தில் எழுந்தருளி, சிறப்பு வான வேடிக்கையுடன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நிகழ்ச்சி நடந்தது. சென்னி மலையின் நான்கு ராஜா வீதிகளில் நடந்த, ஜெகமகா சூரன், சிங்கமுகன், வானுகோபன் மற்றும் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பயபத்தி யுடன் கண்டு களித்தனர். சூரசம்ஹாரத்திற்கு பின், வள்ளி, தெய்வானை சமேதராக, முருகப்பெருமான் கைலாசநாதர் கோவிலில் எழுந்தருளினார்.
* ஈரோடு, திண்டல் வேலாயுதசாமி கோவில், கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர், கருங்கல்பாளையம் சுப்பரமணியர் கோவில், காசிபாளையம் மலைக்கோவில் உள்ளிட்ட, மாநகரில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று (நவம்., 13ல்) சூரசம்ஹாரம் நடந்தது. சிவாசாரியார்கள் புடைசூழ, வலம் வந்த முருகன், சூரனை வதம் செய்தார்.
* புன்செய்புளியம்பட்டி, காமாட்சியம்மன் கோவிலில் உள்ள, முத்துக்குமரன் சன்னதியில், நகரின் முக்கிய வீதிகளில், அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
* சிவகிரி வேலாயுதசுவாமி கோவிலில், அசுரர்களை, சுப்பிரமணியர் சுவாமி, வேலால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
* கொடுமுடி, ஊஞ்சலூர் வாய்க்கால் கரையில் உள்ள, விநாயகர் கோவிலில், கந்தசஷ்டியை யொட்டி, உற்சவர் மூலவர் சிலைகளுக்கு அபிஷேகம் நடந்தது.
அதேபோல, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலிலும், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
* பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், உற்சவமூர்த்தி முருகபெருமான், குதிரை வாகனத்தில் வந்து, கூடுதுறை முக்கில், சூரனை, வேல் கொண்டு வதம் செய்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் கருப்பணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* அந்தியூர் அருகே, ஆப்பக்கூடலில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் சாலையில், கணேச பாலதண்டாயுதபாணி மலைக்கோவில் உள்ளது. இங்கு, சுரசம்ஹார விழா நேற்று (நவம்.,13ல்), நடந்தது.
* திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த, சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது.