திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2026 11:03
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் மூர்த்தி, தீர்த்தம், ஸ்தல விருட்சம் ஆகியவை மூன்றாக அமைந்துள்ளது. காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையானதாகவும், சக்தி பீடங்களில் 51 வது தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் அகோர மூர்த்தி மற்றும் புதன் பகவான் தனிதனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். சிறப்புமிக்க இக்கோவிலின் இந்திரப் பெருவிழா கடந்த 28ய் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. அக்னி, சூரியன், சந்திரன் என்ற மூன்று தீர்த்த குளக்கரையில் அஸ்திரதேவர் எழுந்தருள அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீர்த்த குளங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.