பதிவு செய்த நாள்
14
நவ
2018
02:11
வீரபாண்டி: திரளான பக்தர்களின், அரோகரா கோஷம் முழங்க, சக்திவேலால், கந்தசாமி சூரனை வதம் செய்தார். கந்தசஷ்டி விழாவையொட்டி, சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சூரசம்ஹார விழா, காப்புக்கட்டு உற்சவத்துடன், நேற்று முன்தினம் (நவம்., 12ல்) தொடங்கியது.
நேற்று (நவம்., 13ல்) மாலை, 4:30 மணிக்கு, கோவிலில் இருந்து, கையில் சக்திவேல் ஏந்தியபடி, கந்தசாமி போர்க்கோலத்தில் வெளியே வந்தார். அவருக்கு எதிரே, அசுரர்கள் போர் செய்ய காத்திருந்தனர். சூரசம்ஹாரத்தை காண, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்களின், அரோகரா, வெற்றிவேல், வீரவேல் என, கோஷம் எழுப்ப, யானை முக சூரன், சிங்க முக சூரன், ஆடு முக சூரனைத் தொடர்ந்து, இறுதியாக, சூரபத்மனை, வேல் கொண்டு, கந்தசாமி அழித்தார். அப்போது, தங்கள் வயலில் விளைந்த நெல், கடலை, வாழைப்பழங்களை, சுவாமி மீது வீசி, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று (நவம்., 14ல்) காலை, மயில் வாகனத்தில், சுவாமி திருவீதி உலா நடக்கவுள்ளது. மாலை, தெய்வானையுடன் திருக்கல்யாணம், இரவு, சப்பரத்தில் கல்யாண கோலத்தில் திருவீதி உலா நடக்கும். பின், ஊஞ்சல் பாலி உற்சவத்துடன், சூரசம்ஹார விழா நிறைவடை யும். அதேபோல், சேலம், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம்; அம்மாபேட்டை சுப்ரமணியர், ஊத்துமலை முருகன், பேர்லேண்ட்ஸ் முருகன், ஏற்காடு ஆறுபடை முருகன், ஜாகீர் அம்மாபாளையம், காவடி பழநியாண்டவர் ஆசிரமம் உள்ளிட்ட கோவில்களில், நேற்று (நவம்., 13ல்), சூரசம்ஹார விழா நடந்தது.