பதிவு செய்த நாள்
09
மார்
2026
01:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள மேட்டுத்தெரு நகரீஸ்வரர் கோவில், பஞ்சுபேட்டை ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பேருந்து நிறுத்தம் அருகில், ஸ்ரீகாஞ்சி ஆரிய வைசிய சமாஜத்திற்கு உட்பட்ட நகரீஸ்வரர் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 6ம் தேதி யாக சாலை பூஜைகள் துவங்கின.
நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையுடன், மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதவிற்பன்னர்கள் அனைத்து விமானங்கள் மற்றும் மூலஸ்தானத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். காலை 10:00 மணிக்கு மஹா அபிஷேகமும், காலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது.
ஓணகாந்தேஸ்வரர் கோவில் பெரிய காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஓணகாந்தேஸ்வரர், காந்தேஸ்வரர், சலந்தரேஸ்வர் ஆகிய மூன்று கோவில்களும் 47.40 லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்டன.
இக்கோவில்களின் கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 6ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின.
நேற்று காலை 9:15 மணிக்கு, ராஜகோபுர விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மாலை 3:30 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் நடந்தது.