பதிவு செய்த நாள்
14
நவ
2018
02:11
திருவண்ணாமலை: தீபத் திருவிழாவுக்கு துணிப்பை, சணல் பை எடுத்து வரும் பக்தர்களுக்கு, தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும், என, கலெக்டர் கந்தசாமிகூறினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம் நேற்று (நவம்., 13ல்) நடந்தது. கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி, அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் பேசியதாவது:மாவட்ட நிர்வாகம் சார்பில், 16 தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்படுகின்றன. 2,650 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 14 சிறப்பு ரயில்கள் இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வெளியே, 70, உள்ளே, 103 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
கோவிலுக்குள் பரணி தீபத்துக்கு, 2,500 பக்தர்களும், மகா தீபத்தின் போது, 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், துணிப்பை, சணல் பை எடுத்து வரும் பக்தர்களுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும். இதன்படி, 4 கிராம் எடையுள்ள, 72 வெள்ளி நாணயங்கள், 2 கிராம் எடையுள்ள, ஆறு தங்க நாணயங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.