பதிவு செய்த நாள்
14
நவ
2018
02:11
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே இரிஞ்ஞாலக்குடா கூடல் மாணிக்கம் கோயிலில், வயிறு நோய் தீர்க்கும் மருந்து பிரசாதமான முக்குடி வழங்கும் நிகழ்ச்சி, நாளை(நவ.,15) நடக்கிறது.இரிஞ்ஞாலக்குடா கூடல் மாணிக்கம் கோயிலில் முக்குடி விழாவை தொடர்ந்து, நேற்று தண்டிக வரவு என்ற நிகழ்ச்சி நடந்தது.
சுவாமிக்கு காணிக்கையாக வைக்க புதியதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லில் உருவான அரிசி, காய்கறிகளை எடுத்துவரும் நிகழ்ச்சி இது. கோயிலில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள பொற்றா என்ற இடத்தில் இருந்து, நடந்தே பக்தர்கள் எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு எடுத்து வரப்பட்ட அரிசி, காய்கறியுடன் பக்தர்கள் செலுத்தும் புதிய அரிசியும் சேர்க்கப்பட்டு மெகா விருந்து இன்று (நவம்., 14ல்)நடக்கிறது. முதலில் சுவாமிக்கு படைக்கப் பட்டு திரிபுத்தரி பூஜை நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். காலை 11:00 முதல் மாலை 5:00 வரை நடக்கிறது.விழாவின் முக்கிய அம்சமான முக்குடி பூஜை நாளை (நவம்., 15ல்) நடக்கிறது. முன்னதாக பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவக் குடும்பத்தினரான குட்டஞ்சேரி மூஸ் தலைமையில், நோய் தீர்க்கும் மருந்து தயாரிக்கப்படு கிறது. மந்திரங்கள் ஓதி, பல மூலிகைகள் கலந்து மருந்து தயாராகும். எவ்வகை மூலிகைகள் சேர்க்கப்படுகிறது என்பதில் ரகசியம் காக்கப்படும். இந்த மருந்தும் நைவேத்தியம் செய்யப் பட்டு, பிரசாதமாக காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வழங்கப்படும்.
இந்த மருந்து பிரசாதம் வயிறு தொடர்பான நோய்களை தீர்க்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்த மருந்தைப்பெற நாடுமுழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.மேலும் விபரங்கள் அறிய 0480 -282 6631 ல் தொடர்பு கொள்ளலாம்.