பதிவு செய்த நாள்
14
நவ
2018
02:11
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அருகே, பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டு மென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.
வேட்டைக்காரன் புதூர், டாப்சிலிப், கோட்டூர் பகுதிக்கு, ஆனைமலை வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக, 2001ல் ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் மற்றும், 10 கடைகளுடன் கூடிய தாட்கோ வணிக வளாகமும் கட்டப்பட்டது.ஆனால், முறையான திட்டமிடல் இல்லாமல், ஆட்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் கட்டப்பட்டது. இதனால், பெரும்பாலான மக்கள் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தாமல் தவிர்த்தனர். பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியிலும், முக்கோணம் பகுதியிலும் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் சென்றன.இதன் காரணமாக, திறப்பு விழாவுக்கு பிறகு ஓரிரு மாதம் செயல்பட்ட பஸ் ஸ்டாண்ட் முடங்கிப்போனது. கடந்த, 17 ஆண்டுகளாக யாருக்கும் பயன்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.முக்கோணம் பகுதியில் ரோட்ரோரத்தில் நின்று மக்கள் பஸ் ஏறுவதால், போக்குவரத்து பாதிப்பதுடன் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மாசாணியம்மன் கோவில் பகுதியில், பஸ் ஸ்டாண்ட் அமைத்தால் மக்கள் எளிதாக பஸ் வசதி பெறுவார்கள்.மாசாணியம்மன் கோவில் அருகே பஸ் ஸ்டாண்ட் கட்ட, தனியார் இடத்தை கையகப்படுத்த, ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை வைத்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.