பதிவு செய்த நாள்
15
நவ
2018
01:11
பழநி: திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில், ஆண்டுமுழுவதும், அந்தந்த சீசனுக்கு தகுந்த மாதிரி, பொங்கல்பானை, கோயில் விழாவிற்கு அக்னி சட்டிசெய்யும் பணிநடக்கிறது. தற்போது கார்த்திகை தீபத்திருவிழவிற்காக, மண்சுட்டி விளக்குகளை தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
பழநி, ஒட்டன்சத்திரம், உடுமலை, பொள்ளாச்சி போன்ற பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். அதேசமயம் தொழிலுக்கு மூலப்பொருளான மண் தட்டுப்பாடு, விறகு விலைஉயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் புலம்புகின்றனர். ஆயக்குடி தொழிலாளி பிச்சைமுத்து கூறுகையில்,பெரிய கார்த்திகை வரவுள்ளதால், மண்சுட்டிகள் தயார் செய்கிறோம். இவ்வாண்டு மண், விறகு விலை உயர்வால் தயாரிப்பு பாதியாக குறைந்துவிட்டது. ஒரு மாட்டுவண்டிக்கு ரூ.1500வரை கேட்கின்றனர். விறகும் 10கிலோ ரூ.120 விற்கிறது.
இதனால் ஒருசிலர் மட்டுமே விளக்குகள் தயார் செய்கிறோம். மொத்த வியாபாரிகளிடம் 60பைசா முதல் ரூ.2 வரை விளக்குகளின் அளவிற்கு ஏற்றவாறு விற்கிறோம். மண்பண்டத் தொழிலில் வருமானம் இல்லாததால் பலர் மாற்றுவேலைக்கு சென்றுவிட்டனர்,என்றர்.