பதிவு செய்த நாள்
18
நவ
2018
12:11
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலை செல்வது வழக்கம். நேற்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி வெள்ளை விநாயகர், 108 விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர் கோயில், மலையடிவாரம் ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் குருசாமிகளிடம் மாலை அணிந்து கொண்டனர். இதையொட்டி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பழநி: கார்த்திகை மாதபிறப்பை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி கிரிவீதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில், அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது. சபரிமலைக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்தனர்.