பதிவு செய்த நாள்
22
நவ
2018
12:11
திருப்போரூர்: புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில் மலையில், மகா தீப விழா நாளை நடைபெறுகிறது.திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் வண்டலுார் சாலையில், புதுப்பாக்கம் உள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற, வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலின் பாரிவேட்டை ஸ்தலமாக இது விளங்குகிறது. தினசரி விசேஷ திருமஞ்சன வழிபாட்டுடன், பிரதி வாரம் சனிக்கிழமை அமாவாசை, பவுர்ணமி, மூலம் நட்சத்திர நாளில், சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தியை அடுத்து, சிறப்பு விழாவாக, மஹா தீப விழா நடைபெறுகிறது. 232 அடி உயரம் உள்ள மலைக்கு செல்ல, படிக்கட்டு பாதையுடன், இரு சக்கரம், கார் செல்ல சிமென்ட் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு, நாளை மாலை, 6:00 மணிக்கு, தீப விழாவில், 3 அடி உயரம், 5 அடி விட்டம் கொண்ட வெண்கல கொப்பரையில், 508 கிலோ நெய் விட்டு தீபம் ஏற்றப்படவுள்ளது. தாம்பரத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.