பதிவு செய்த நாள்
23
நவ
2018
12:11
பேரூர்;மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில்களில், கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடைபெற்றது. முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாக கருதப்படும் மருதமலை திருக்கோவிலில், நேற்று கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, 5:00 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றன.மதிய பூஜைகளுக்கு பின், சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மாலை, 4:00 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் திருவீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான திருவிளக்கேற்றுதல் மாலை, 5:00 மணிக்கு துவங்கியது.முதலில், மூலவருக்கு தீபம் ஏற்பட்டது. தொடர்ந்து, சிவபெருமான், மரகதாம்பிகை, நவகிரக சன்னதி, கோபுரம் ஆகியவற்றில் தீபம் ஏற்பட்டன. முருகப்பெருமான், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபக்கம்பத்தில், 7:00 மணிக்கு மகா தீப விளக்கு ஏற்பட்டது. சொக்கப்பானை கொளுத்தப்பட்டு, தங்க ரதத்தில் சுவாமிகள் வீதியுலா வந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.பச்சை நாயகிக்கு அபிேஷகம்இதே போன்று, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், சாயரட்சை பூஜை முடிந்ததும், மூலவர் மற்றும் பச்சை நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், கோவில் வாசலில் உள்ள தீபஸ்தம்பத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்பட்டு, சொக்கப்பானை கொளுத்தப்பட்டது.