பதிவு செய்த நாள்
23
நவ
2018
12:11
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று மாலை, பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபி ?ஷகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, கோவிலின் முன்புறமுள்ள கொடிமரத்தில், விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு, வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், சேலம், கடைவீதி லட்சுமி நரசிம்ம பெருமாள், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, பாண்டுரங்கநாதர், சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி உள்பட பெருமாள் கோவில்களில், விஷ்ணு தீப வழிபாடு நடந்தது. திருக்கார்த்திகை தீபமான இன்று, சிவன் கோவில்களில் தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படும். ஆனால், நடப்பாண்டு கார்த்திகை முதல் பவுர்ணமி வந்ததால், கடைவீதி காசி விஸ்வநாதர் கோவில் உள்பட, சில கோவில்களில், நேற்று மாலை தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடந்தது.
பிரதிஷ்டை: தம்மம்பட்டி, திருமண்கரடு மலையில், பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. நேற்று, 370 அடி உயர மலையின் மேல் உள்ள, 12 அடி உயர பீடத்தில், மூன்றடி உயரம், 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட செம்பு கொப்பறையை, பிரதிஷ்டை செய்தனர். முன்னதாக, கொப்பரைக்கு பூஜை செய்து, தம்மம்பட்டியில் ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். இன்று, கார்த்திகை தீபத்திருநாளில், மலையின் மேல், மஹா தீபம் ஏற்றப்படவுள்ளது.