பதிவு செய்த நாள்
24
நவ
2018
03:11
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் காரை கல் செக்கு, இன்றும் மக்களின் பார்வைக்கு உள்ளது. இந்த செக்குகளில் சாந்து தயாரித்து மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனைகளை உருவாக்கி இருப்பதை வரலாறு கூறுகிறது.
தமிழகத்தில் காரை கல் செக்குகள் மூலம் சுண்ணாம்பு கல்லை அரைத்து சாந்து தயாரித்துள்ளனர்.தற்போதைய கல் கட்டடங்களுக்கு முன்பு ஏழாம் நூற்றாண்டில் செங்கல்
கட்டடங்கள் இருந்துள்ளன. கருங்கல் சுவர்களுக்கு அதற்கு மேல் காரைப் பூச்சு தேவை இல்லை. செங்கல் பயன்படுத்தப்பட்ட சுவர்களுக்கு சுண்ணாம்பு பூச்சு தேவைப்பட்டது.
சுண்ணாம்புடன் மணல் கலந்து அதனை காரை ஆலைகளில் அரைப்பர். 50 ஆண்டுகளுக்கு முன்புவரை இது வழக்கத்தில் இருந்தது.சிமென்ட் வருகைக்குப்பின் காரை பூச்சு வழக் கொழிந்தது.அரைக்கப்பட்ட சுண்ணாம்புக் காரையை சில நாட்கள் சேமித்த பிறகே பயன் படுத்தப்படும். சுண்ணாம்புக் காரை ஆலையில் சுற்றுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரைத் தீர்வை, முக்காத் தீர்வை, முழுத் தீர்வை, என மூன்று வகைப்படும்.
முழுத்தீர்வை காரையில் மணல் முழுமையாக அரைபட்டிருக்கும். சுண்ணாம்பு பசைத் தன்மையும், பிடிப்புத்தன்மையும் அதிகம் கொண்டது. காரை கலவையில் கடுக்காய் நீர், பதநீர் அல்லது சர்க்கரை நீர் மற்றும் நெல்லிக்காய், தான்றிக்காய், முட்டையின் வெள்ளைக்கரு கலந்து காரை தயாரித்தால் அதன் ஸ்திரத் தன்மை அதிகமாகும். இதற்கு வச்சிரக்காரை
என்று பெயர்.
இவ்வாறு காரை செக்கிலோ, சுண்ணாம்பு அரவை ஆலையிலோ அரைத்து தயாரிக்கப் படுகின்ற சுண்ணாம்பு சாந்தையே சுதைச் சிற்பங்கள் தயாரிக்க பயன்படுத்தினர். சிற்பிகள் கோபுரங்களில் உள்ள சுதைகளை சிற்பங்களை உருவாக்க இன்றும் சுண்ணாம்பு காரைகளையே பயன்படுத்துகின்றனர்.
மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனை, ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை அமைக்கு சுண்ணாம்பு காரைகளையே பயன்படுத்தியதாக, திருப்பணிமாலை என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சுண்ணாம்பு காரை தயாரிக்கும் முறை குறித்தும் விளக்கமாக கூறுகிறது.
இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க சுண்ணாம்பு காரை அரவை ஆலைகளில் பயன்படுத்தப் பட்ட கல் செக்கு, இன்றும் பார்வைக்காக ராமலிங்கவிலாசம் அரண்மனையில் வைக்கப் பட்டுள்ளது.