பதிவு செய்த நாள்
26
நவ
2018
01:11
கன்னியாகுமரி: கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திரத்தில் அமைக்கப்பட்டு வரும் வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம், ஜன., 27ல் நடத்தப்பட உள்ளதாக, திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, அனில்குமார் சிங்கல் தெரிவித்தார். இக்கோவில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேந்திர நிர்வாகம் நன்கொடையாக வழங்கிய, 5.5 ஏக்கர் நிலத்தில், 22.5 கோடி ரூபாய் செலவில், திருப்பதி வெங்கடாஜபதி கோவில் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இங்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாசலபதி சன்னதி, பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதிகளும், கருட பகவான் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், தேரோட்டம், தெப்பத்திருவிழா போன்ற அனைத்து விழாக்களும், அதே நாளில், அதே நேரத்தில் இங்கு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கடற்கரையின் மிக அருகாமையில் அமைவது, மிகவும் சிறப்பானது. மேலும், இக்கோவிலில் பிரமோற்சவம் நடைபெறும் நாளன்று, வெங்கடாசலபதி சுவாமி பாதத்தில், சூரிய ஒளி விழும் விதத்தில், கோவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.இக்கோவிலின் கும்பாபிஷேகம், அடுத்த ஆண்டு, ஜனவரி, 27 தேதி நடைபெற உள்ளது. அதன்பின், பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.