பதிவு செய்த நாள்
26
நவ
2018
01:11
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்திற்கு பெருமை சேர்க்கும், சங்கு தீர்த்த குளத்தின் வரத்து கால்வாய், ஆக்கிரமிப்பால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், நீர்வரத்து இன்றி, நிரம்பாமல் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலமாக வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்குள்ள வேதகிரீஸ்வரர் மலை, 500 அடி உயரத்தில், 245 ஏக்கரில் உள்ளது. ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ள, சங்கு தீர்த்த குளம், மாவட்டத்தில் அதிக பரப்பு கொண்ட பெரிய குளமாக, 12 ஏக்கரில் உள்ளது. இங்கு, 12 ஆண்டுக்கு ஒரு முறை, சங்கு பிறக்கிறது என்ற ஐதீகம் உள்ளதால், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பல சிறப்பு வாய்ந்த இக்குளத்திற்கு, வேதகிரீஸ்வரர் மலையிலிருந்து நீர் வருவதற்கான, நீர்வரத்து கால்வாய் கட்டமைப்பும், துாய்மையான நீரை பிரித்து அனுப்புவதற்கான வடிதொட்டி உள்ளது. அந்த கால்வாய்களில், கழிவு நீரை விடுவதாலும், கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாலும், பராமரிப்பின்றி துார்க்கப்பட்டு வருகிறது. இதனால் குளத்திற்கு நீர் வரத்து தடுக்கப்பட்டு, குளம் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.