பதிவு செய்த நாள்
16
பிப்
2012
11:02
திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் ஆதிமூல அய்யனார் உத்தண்ட காளை சுவாமி கோயிலில் 100 ஆண்டுகளுக்குப்பின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.கரிவலம்வந்தநல்லூர் ஆதிமூல அய்யனார் உத்தண்ட காளை சுவாமி கோயிலில் சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் நடத்தி கோபுரம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்நாள் மாலை மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யவாசனம், வாஸ்துசாந்தி பூஜைகள், வாஸ்துஹோமம், பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் நடந்தது. இரண்டாம் நாள் காலை விக்னேஷ்வர பூஜை, கணபதி, அஷ்டலெட்சுமி நவக்கிரக ஹோமங்கள், கோமாதா, சுமங்கலி தம்பதி, பிரும்மசாரி பூஜைகள் நடந்தது. மாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கலசநிர்ணயம், தீர்த்த சங்கமம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் "சிவபெருமானின் திருவிளையாடல் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவாற்றினார். மூன்றாம் நாள் காலை புண்யாகவாசனம், இரண்டாம் கால யாக பூஜைகள், பிம்பசுத்தி பூஜைகள், சயானதிவாச பூஜைகள், பூர்ணாகுதி, மாலையில் விக்னேஷ்வர பஞ்சபாலிகா யந்திர பூஜை, மூன்றாம் கால யாகங்கள், யந்திர பிம்பம், பிரதிஷ்டைகள், பூர்ணாகுதி ஆகியன நடந்தது. அன்று இரவு "எந்நாளும் இன்பமே என்ற தலைப்பில் தமிழாசிரியர் சந்தனகுமார் பக்தி சொற்பொழிவாற்றினார்.நான்காம் நாள் காலை விக்னேஷ்வர பூஜை, பிம்ப, ரக்ஷாபந்தனம், சோமசூரிய பூஜைகள், 4ம்கால யாகங்கள், ஸ்பர்ஸாகுதி, நாடிசந்தனம், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்படுதல் நடந்தது. தொடர்ந்து உத்தண்டகாளை சுவாமி மற்றும் பூர்ணாபொற்கொடி சமேத அய்யனார் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம், பின் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம் ஆகியன நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கேரள பிரசன்ன ஜோதிடம் வேதகாம விற்பன்னர் சர்வசாதகம் கண்ணன்போத்தி நடத்தினார். விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் நிர்வாகி கோமதிநாயகம் செய்திருந்தனர்.