பதிவு செய்த நாள்
03
டிச
2018
12:12
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, வயலக்காவூரில், மஹாவீரருக்கு பிரதிஷ்டை விழா நேற்று, விமரிசையாக நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது வயலக்காவூர். செய்யாற்றங்கரை மீது அமைந்துள்ள இக்கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மஹாவீரர் சிலை கிடந்தது.இதை அறிந்த, திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த சமண வரலாற்று ஆய்வாளர்கள், ஜீவக்குமார் மற்றும் சசிகலா, அங்கு சென்று ஆய்வு செய்தனர்.அப்போது, அந்த சிலை, 10ம் நுாற்றாண்டை சேர்ந்த மஹாவீரர் சிற்பம் என்பதை உறுதி செய்தனர்.மஹாவீரர் சிலை இருந்த தன் நிலத்தை, தானமாக வழங்க அப்பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் முன் வந்தார். அதை அடுத்து, அங்கு, சமணர் கோவில் கட்டும் பணி நடந்தது.பணி முழுதாக நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று திறப்பு விழா மற்றும் மஹா வீரர் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. சமண கோவில்களின் தலைவர், பட்டாரகர் தலைமையில் நடந்த, இந்நிகழ்ச்சியில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.