பதிவு செய்த நாள்
03
டிச
2018
12:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் (டிச., 14) துவங்குகிறது.
அன்று இரவு 7:00 மணிக்கு மூலவர் சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை முடிந்து திருமுறை பாடப்படும். கோயில் திருவாட்சி மண்டபத்தை பல்லக்கில் மாணிக்கவாசகர் மூன்று முறை வலம் வந்து எழுந்தருள்வார்.
சிவாச்சார்யாரால் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டு, ஓதுவாரால் திருவெண்பாவை 21 பாடல்கள் பாடப்படும். இந்நிகழ்ச்சி டிச., 21 வரை நடக்கும்.டிச., 22 காலை மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம் செல்வார். இரவு கோயிலுக்குள் கண்ணுாஞ்சல் முடிந்து, சத்திய கிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, கோயில் முன் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய ராட்டினத்தில் எழுந்தருள ராட்டின திருவிழா நடக்கும். டிச., 23 அதிகாலை கோயில் மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தைல காப்பு சாத்துப்படியாகி, உற்ஸவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.
*லட்சுமி தீர்த்த குளம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்த குளம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வருகிறது.
மலை அடிவாரத்திலுள்ள இக்குளம் மழை பெய்யும் போது பாறைகளிலிருந்து வழியும் மழை நீரால் மட்டுமே நிரம்பும். குளத்திலுள்ள மீன்களுக்கு உப்பு, மிளகு, பொரி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இதனால் தோல் வியாதிகள் குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஏழு ஆண்டுகளாக மழையின்றி குளம் வறண்டு கிடந்தது. குளத்திற்கு மழைநீர் வரும் பாறைகளில் இருந்த தடுப்பு சுவர்கள் சேதமடைந்திருந்தன. அவற்றை சீரமைக்கவும், குளத்தில் நிரந்தமாக தண்ணீர் தேக்கவும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக உபயதாரர் மூலம் மலையிலிருந்து மழைநீரை லட்சுமி தீர்த்த குளத்திற்குள் சேகரிக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது. சமீபத்திய மழையால் லட்சுமி தீர்த்தம் நிரம்பி வருகிறது.