பதிவு செய்த நாள்
07
டிச
2018
12:12
சென்னை:சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க, அறநிலையத் துறை இணை ஆணையர்கள் அடங்கிய, உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது என, உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த, மயில் சிலை மாயமான வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அறநிலையத் துறை சார்பில் ஆஜரான, சிறப்பு பிளீடர், மகா ராஜா, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, மதுரை மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் உள்ள, அறநிலையத்துறை இணை ஆணையர்கள் அடங்கிய, உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், துறை ரீதியான விசாரணை நடக்கலாம்; அதே நேரத்தில், சிலை தடுப்பு பிரிவும், தன் விசாரணையை தொடரலாம் என்றனர்.இதற்கிடையில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலில், சிலைகள் மாயமானது மற்றும் பழமை வாய்ந்த பொருட்கள் சேதப் படுத்தப்பட்டது குறித்து, வழக்கு பதிவு செய்யக்கோரி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, ரங்கராஜன் நரசிம்மன், வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுக்கள், விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது, வழக்கறிஞர் ராஜேந்திரன், கோவிலில் இருந்த, பழமைவாய்ந்த, 52 கதவுகள், கற்கள், கலைநயம் மிக்க பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. சிலைகளை திருடு வோர், கோவில் நகைகளை திருடுவோர் என, இரண்டு ரகங்கள் உள்ளன. ஒரு கோவிலின் நகையை விற்க முயன்ற அதிகாரி, கைது செய்யப்பட்டுள்ளார், என்றார்.
இதற்கு, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர், ஏற்கனவே நரசிம்மன் அளித்த புகாரில், சிலை தடுப்பு பிரிவு, விசாரணையை துவங்கி உள்ளது. ஒரே பிரச்னைக்காக, மற் றொரு வழக்கு பதிவு செய்ய தேவையில்லை என்றார். இதையடுத்து, புகாரில் முகாந்திரம் உள்ளதா... என்பதை விசாரித்து, ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க, சிலை தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.