பதிவு செய்த நாள்
10
டிச
2018
12:12
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பொங்கலுாரில் மூன்று நாள் நடக்கவுள்ள, சோடஷா ஸ்ரீ மகாலட்சுமி மகாயாகத்துக்கு மகாலட்சுமி, ஜம்பொன் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்து முன்னணி சார்பில், உலக நன்மை, வியாபார வளம், விவசாயம் செழித்து, குடும்பங்களில் ஐஸ்வர்யம் பெருக, சோடஷா ஸ்ரீ மகாலட்சுமி மகாயாகம், திருப்பூர் மாவட்டம், பொங்கலுார், தில்லை நகரில் நடத்தப்பட உள்ளது.ஒரு லட்சம் குடும்பங்கள் பங்கு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, இம்மாதம், 23 முதல் 25ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், 1,008 கோ பூஜை மற்றும் கஜ பூஜை, 108 அஸ்வ பூஜை நடக்கிறது.தொடர்ந்து, திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதற்காக, 360 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட பிரமாண்ட யாக குண்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
பூஜைக்கான மகாலட்சுமி சிலை, நேற்று காலை யாககுண்ட வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆயிரம் பெண்கள், மஞ்சள் நீர் கலசம் எடுத்து வந்து மகாலட்சுமி அபிஷேகம் செய்து வழிபட்டனர்.இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆசியுரை வழங்கினார்.நேற்று, பிரதிஷ்டை செய்யப்பட்ட மகாலட்சுமி சிலைக்கு வரும், 23ம் தேதி வரை காலை மற்றும் மாலையில், பெண்கள் மஞ்சள் அபிஷேகம் செய்யலாம் என, இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.