ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை, விருதுநகர் மாவட்டத்தை ஒட்டி மேற்குதொடர்ச்சிமலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் கோயிலுக்கு பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டு மின்றி, வெளிநாட்டு பக்தர்களும் வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கில் சிலர் பலியாகினர். இதனால் பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோயிலுக்கு செல்ல வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி பவுர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு, 4 நாட்களுக்கு மட்டுமே தற்போது பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள். இதில் சனி, ஞாயிறு வாரவிடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மாதத்தின் அனைத்து நாட்களும் கோயிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதிக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும், திடீர் மழை, வெள்ளம் ஏற்பட்டால் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்வதில் ஏற்படும் சிக்கல்களாலும், வனப்பகுதியில் சுகாதாரகேடு மற்றும் மாசுக்கள் அதிகரித்து சுற்றுசூழல் கெடும் என்பதாலும் இதற்கு வனத்துறை மறுத்து வருகிறது.ஆனாலும், தினசரி சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டுமென்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.